Tuesday, October 9, 2018

ராகு தோஷங்கள் விலகும்

ராகு தோஷங்கள் விலகும்
ராகு தோஷங்கள் விலகும்

 கீழத் திருவேங்கடநாதபுரம் கயிலாசநாதர்

கயிலாசநாதர் என்கிற திருநாமத்துடன் ஈசன் அருள் பாலிக்கும் தலங்கள் தமிழகத்தில் அநேகம். அதிலும் ‘நவ கயிலாயம்’ என்று சிறப்பித்துக் கூறப்படும் ஒன்பது சிவத் தலங்கள், தாமிரபரணி நதிக்கரையில் அருளாட்சி புரிந்துவருகின்றன.

இந்தக் கயிலாசநாதர் ஆலயங்கள், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டப் பகுதிகளில் அமைந் துள்ளன. இந்த ஒன்பது திருத்தலங்களிலும் உள்ள ஈசனுக்கு வெவ்வேறு பெயர்கள் வழங்கப்பட்டு வந்தாலும், அந்த லிங்கத் திருமேனிகளுக்கு உள்ள பொதுவான பெயர் ‘கயிலாசநாதர்.’ இதில், நெல்லை ஜங்ஷனிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் கீழத் திருவேங்கடநாதபுரம் என்கிற குன்னத்தூரில் அமைந்துள்ள கயிலாசநாதர் ஆலயம், ராகுவின் சிறப்புடன் விளங்குகிறது.

‘நவகயிலாய’ வரிசையில், 4-வது தலமாகத் திகழும் இந்தத் தலத்தை, ‘தென் காளஹஸ்தி’ என்று குறிப்பிடுகிறார்கள் ஆன்மிக அன்பர்கள். ராகுவின் ஆதிக்கத்தில் இந்த ஆலயம் இருப்பதால், இங்குள்ள ஒவ்வொரு மூலவர் விக்கிரகத் திலும் நாகர் உருவம் இருப்பதைக் காணலாம்.  இங்கே அருளும் கயிலாச நாதர், லிங்கத் திருமேனியராக தரிசனம் தருகிறார். உமை தொழும் நாயனார், கோத பரமேஸ்வரர், தென் காளத்தி நாதர் என்றெல்லாம் போற்றப் படுகிறார் இந்த ஈசன்.

ஒரு முறை, அப்பாவிப் பெண் ஒருத்தியைத் தவறாக எண்ணித் தண்டித்துவிட்டாராம் இந்தப் பகுதியை ஆண்ட அரசன். அதனால் பல இன்னல்களுக்கு ஆளானான். பின்னர் இந்தத் தலத்துக்கு வந்து சிவனாரை வழிபட்டு,  துயரங்கள் நீங்கி நிம்மதி அடைந்தானாம்.  ஆக, இத்தல இறைவனை வழிபட்டால், நாம் அறியாமல் செய்த பாவங்கள் விலகும்.

‘கோதாட்டுதல்’ என்றால் பாவம் முதலிய குற்றங்க ளைப் போக்குதல் என்று பொருள். அறியாமல் செய்த பிழைகளைப் பொறுத்தருளும் ஈஸ்வரர் என்பதால், ‘கோத பரமேஸ்வரர்’ என இவர் அழைக்கப்படுவதாக ஒரு தகவல் சொல்கிறார்கள்.

ராகு காலத்தில் 18 வகையான திரவியங்களைக் கொண்டு கயிலாசநாதருக்கு அபிஷேகம் செய்யப் படும். கயிலாசநாதரின் லிங்கத் திருமேனிக்குப் பால் அபிஷேகம் செய்யும்போது கூர்ந்து கவனித்தால், இவரின் பாணப் பகுதியில் இருக்கும் மெல்லிய - வளைந்த கோடு போன்ற நாகர் உருவ அமைப்பு, கிடுகிடுவென்று ஊர்ந்து செல்வதுபோல் தோன்றுமாம்.

ராகு தோஷத்தால் பாதிக்கப் பட்டிருப்பவர்கள், குழந்தைச் செல்வம் வேண்டுவோர், திருமணத் தடை அகல வேண்டுவோர், கல்வி ஞானம் பெற விழைவோர் ஆகியோர் இங்கு வந்து ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது நலம் பயக்கும்.

தவிர, நாக தோஷம் இருக்கும் அன்பர்கள், வயிற்றுக் கோளாறு மற்றும் மன நோயால் பாதிக்கப் பட்டிருப்பவர்கள், தகுந்தவர் களின் அறிவுரைப்படி வெள்ளி நாகர் விக்கிரகத்தை வாங்கி வந்து இங்கே பூஜை செய்து அதை ஆலயத்துக்கே கொடுத்து விடுகிறார்கள். திருவாதிரை, சுவாதி, சதய நட்சத்திரக் காரர்கள் இந்தக் கயிலாசநாதரை வழிபட்டால், அவர்கள் தங்கள் வாழ்வில் வளம்பெறுவர்.

No comments:

Post a Comment

Google Analytics Alternative