பொன்விளைந்த களத்தூர் - ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்
பொன்விளைந்த களத்தூர் என்னும் திருத்தலம் பசுமையான வயல்கள் சூழ்ந்த ஓர் அழகிய கிராமம். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது. செங்கல்பட்டிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது பொன்விளைந்த களத்தூர். அபிமான ஸ்தலம். ஸ்வாமி தேசிகன் யாத்திரையாக திருவஹீந்திபுரம் செல்லும் வழியில் களத்தூரில் தங்கியிருந்தார். அவர் ஆராதிக்கும் ஸ்ரீ ஹயக்ரீவ விக்கிரகத்தையும் உடன் எடுத்துச் செல்வது வழக்கம். ஸ்ரீ ஹயக்ரீவருக்கு பூஜை செய்து நைவேத்தியம் சமர்ப்பித்து வழிபடுவதும் அவர் வழக்கம். களத்தூருக்கு வந்த அன்று, பெருமாளுக்குக் கண்டருளப் பண்ண எதுவும் கிடைக்காததால், தீர்த்தத்தையே நிவேதனம் செய்து, அதையே தானும் பருகிவிட்டு உறங்கினார். அன்று இரவு அந்த ஊர் நிலங்களை ஒரு வெள்ளைக் குதிரை மேய்ந்ததைக் கண்ட அவ்வூர் மக்கள் அதைத் துரத்த, அந்தக் குதிரை, ஸ்வாமி தேசிகன் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்து மறைந்தது. சப்தம் கேட்டு எழுந்த ஸ்வாமி தேசிகனிடம், ஊர் மக்கள் குதிரை மேய்ந்த விஷயத்தைக் கூற, ஸ்வாமி தேசிகனுக்கு அது சாதாரணக் குதிரை அல்ல, சாக்ஷாத் ஹயக்ரீவரே என்று புரிந்தது. உடனே நிலத்துக்குச் சென்று பார்த்ததில் அந்தக் குதிரை மேய்ந்த இடங்களில் எல்லாம் நெல்மணிகளுக்குப் பதிலாகப் பொன்மணிகள் விளைந்திருப்பதைக் கண்டார். மக்களிடம் இவையனைத்தும் ஹயக்ரீவப் பெருமாளின் செயலே என்று விளக்கிக்கூறி பின்னர் ஸ்வாமி தேசிகன் அங்கிருந்து புறப்பட்டார் என்பது வரலாறு. வயலில் (களத்தில்) பொன் விளைந்ததால், அந்த ஊருக்கு பொன்விளைந்த களத்தூர் என்ற பெயர் ஏற்பட்டது என்பது தலவரலாறு.
No comments:
Post a Comment